எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

பிப்ரவரி 20, 2012

சிறப்பாக நடந்து முடிந்த அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு

சிறப்பாக நடந்து முடிந்த அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு 

அமீரகத்தில் அடியற்கை சகோதரர்களின் சங்கமம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், அமீரகத்தில் கடந்த 10.02.2012 அன்று வெள்ளிக்கிழமை காலை பொழுது விடுமுறை நாள் என்றாலும் துபை மாநகரம்
பரபரப்பாகவே இருந்தது. தேரா துபை முத்தீனா தெருவில் மட்டும், எப்போதும் பரபரப்பாக இருக்கும் நிலைமைக்கு மாறாக அமைதியாக இருந்தது. அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்களின் ஒருங்கிணைந்த சந்திப்பு நிகழும் துபை இந்தியன் இஸ்லாமிக் செண்டர் மட்டும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. ஒருபுறம் அமானின் நிர்வாகிகளும் செயல் வீரர்களும் மீட்டிங் ஹாலை அழகுபடுத்தி கொண்டு இருந்தார்கள். மறுபுறம் அமீரகம் வாழ் அடியற்கை சகோதரர்கள் குழு குழுவாக வந்து ஹாலில் அமரத்தொடங்கினார்கள். சரியாக 11:00 மணிக்கு முதல் அமர்வு அமான் தலைவர் சகோதரர் ஹாஜாமுபாரக் தலைமையில் அமானின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோதரர் பனிஅப்தால் அவர்களின் இறைவேத வசன ஒலியுடன் துவங்கியது. அமானின் ஆலோசனைக்குழு உறுப்பினர் அல்ஹாஃபிஸ் சிராஜ் ஹஜ்ரத் அவர்களின் சிறப்புரை நிகழ்ந்தவுடன் 12:30 முதல் ஜும்ஆக்கான நேரம் வந்தவுடன் முதல் அமர்வு நிறைவு பெற்றது. மக்கள் ஜும்ஆ தொழுகைக்கு புறப்பட்டார்கள். தொழுகை முடிந்து வந்தவுடன் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. வந்திருந்த சகோதரர்கள் அனைவருமே தன் வீட்டு விஷேசம் போல ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு விருந்தோம்பலில் உபசரித்து கொண்டார்கள். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் பரக்கத் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனர் சர்புதீன் அவர்கள் சுவையான உணவு தயாரித்து கொடுத்திருந்தார். 02:45 க்கு இரண்டாவது அமர்வு அமானின் கெளரவத்தலைவர் ஜனாப்.இ.ந.அ.நூருல்அமீன் அவர்கள் தலைமையில் சிராஜ் ஹஜ்ரத் அவர்களின் இறைவேத வசன ஒலியுடன் துவங்கியது. முதலில் அமானின் கெளரவத்தலைவர் நூருல் அமீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள், தொடர்ந்து, அமானின் துணைத்தலைவர் கபீர் அஹ்மது அவர்கள் அடியக்கமங்கலம் முஸ்லிம் மஹாஜன சபை தலைவர் ஜனாப்.எம்.புர்ஹானுதின் அவர்களும், அமானின் ஊர் பிரதிநிதி ஜனாப்.சாதிக்அலி (திரி ஸ்டார்) அவர்களும், மற்றும் சவூதி, பஹ்ரைன், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் வசிக்கும் அடியற்கை சகோதரர்கள் அனுப்பிய வாழ்த்து கடிதங்களை வாசித்தார்கள். அமானின் பொருளாளர் அமீருதீன் அவர்களால் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அமானின் தணிக்கையாளர் அபுபக்கர் 2011-2012 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்த கணக்குகளை சமர்ப்பித்தார்.தொடர்ந்து அமானின் தலைவர் ஹாஜாமுபாரக் நிறைவுரையில், தனது தலைமையில் இருந்த நிர்வாகத்தில் குறைகள் இருந்திருந்தால் அது மனிதர்களாகிய எங்களைச்சாரும், அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டு, நிறைகள் இருந்தால் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று கூறி,  ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்து நிர்வாகத்திலிருந்து பிரியாவிடை கொடுத்தார். உடன் அமானின் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் 2012-2013 ஆண்டுக்கான அமானின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். அமான் பைத்துல்மாலுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த பொதுக்குழுவுக்கு சிறப்பு விருந்தினர்களாக தாயகத்திலிருந்து வந்திருந்த அடியற்கை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.நிஜாமுதீன் அவர்களும், அமானின் அழைப்பை ஏற்று பஹ்ரைனிலிருந்து வந்திருந்த ஓடம்போக்கி எம்.சுல்தான் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். சகோதரர் நிஜாமுதீன் அவர்களின் வாழ்த்துரையோடு, தான் பஞ்சாயத்து தலைவரான பிறகு, நமதூர் நலன்கருதி செய்த நற்காரியங்களையும் செய்யப்போகும் திட்டங்களையும் பற்றி விவரித்தார். அத்துடன், தன்னையும் அமானில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். மேலும், அமானின் பைத்துல்மாலுக்கு தான் வழங்கும் ஜக்காத்து நிதியிலிருந்து ஒரு தொகையை அமான் பைத்துல் மாலுக்கு தருவதாக வாக்கு அளித்தார். சகோதரர் சுல்தான் அவர்கள் பேசும், தாம் துபைக்குத்தான் வந்திருக்கோமா அல்லது அடியக்கமங்கலத்துக்குத்தான் வந்திருக்கோமா என்று ஆச்சரியமாக வினவினார். அந்த அளவிற்கு நமதூர் மக்கள் ஒற்றுமையாக ஒரு இடத்தில் கூடியிருப்பதை கண்டு பரவசம் அடைந்தார். அதோடு நின்றுவிடாமல் தான் பஹ்ரைன் சென்ற பிறகு அங்கு வாழும் நமதூர் சகோதரர்களை ஒருங்கிணைத்து அமானின் கிளையை பஹ்ரைனில் துவங்குவதற்கு முயற்சி எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அத்துடன், அமான் பைத்துல்மாலுக்கு அதன் தலைவர் சகோதரர் பனிஅப்தால் அவர்களிடம் முதல் நன்கொடை அளித்து அமான் பைத்துல்மாலை துவங்கி வைத்தார்கள். அமானின் பைத்துல்மால் ஆய்வுக்குழு தலைவர் பனிஅப்தால் அவர்கள் பைத்துல்மால் பற்றி விளக்கம் அளித்தார்கள், அதோடு மட்டுமல்லாமல் நமதூரில் இருந்த மத்ரஸா ஸிராஜுல் முனீர் பற்றியும், அதற்காக உழைத்த நமதூர் உலமா பெருமக்களையும், குறிப்பாக மெளலவி.ஹெச்.எஸ்.ஜெய்னுலாபுதீன் ஹஜ்ரத் அவர்களையும் நினைவு கூர்ந்து கண்கலங்கிய போது பார்த்த நமது இதயங்கள் கணத்தது. அவருடைய உரையை நிறைவு செய்யாமலே சலாம் கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார். அடுத்து அமான் பைத்துல்மால் குழு உறுப்பினர் அனீஸுதீன் அவர்கள் பைத்துல்மால் பற்றிய விளக்கம் அளித்தவுடன் பொதுக்குழு முன்னிலையில் அமான் பைத்துல்மால் துவங்குவதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. இறுதியாக, அமானின் செயல்வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து  இந்த பொதுக்குழுவின் புதுமையாக வந்திருந்த அனைவருக்கும் பரிசுக்கூப்பன் கொடுக்கப்பட்டு இருந்தது. அது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் சிறப்பு விருந்தினர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளையும், நினைவுப்பரிசுகளையும், வழங்கிவர்கள், கஜுரா சாதிக் பெர்ஃப்யூம் நிறுவனத்தார் மற்றும் பரக்கத் கேட்டரிங் & அலியார் குரூப்ஸ் நிறுவனத்தார்கள். நிறைவாக, இவை அனைத்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கி கொண்டிருந்து சகோதரர் ஹாஜாமுபாரக் முதலில், இந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி தந்த அல்லாஹ்வுக்கும், வந்து சிறப்பித்து தந்த நம் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி கூறி துஆ ஓதியவுடன் பொதுக்குழு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

அமானின் ஐந்தாம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்

கெளரவத்தலைவர்: ஜனாப். அல்ஹாஜ். இ.ந.அ.நூருல் அமீன் அவர்கள் (ராஜாத்தெரு)
தலைவர்: ஜனாப். ஏ.ஆர்.ஷவ்கத் அலி (ரயிலடித்தெரு)
துணைத்தலைவர்: ஜனாப். ஏ.ஐ.ஷேக்தாவூத் (புதுமனைத்தெரு)
பொதுச்செயலாளர்: ஜனாப். எஸ்.அமீருதீன் (புதுரோடு)
துணைப்பொதுச்செயலாளர்கள்: ஜனாப். ஏ.ஹாஜி முஹம்மத் (அபுதாபி) (மணற்கேனித்தெரு)
                                               ஜனாப். ஏ.இனாயத்துல்லாஹ் ( துபை ) (புதுமனைத்தெரு)
                                               ஜனாப். என்.ஹாஜா மெய்தீன் ( ஷார்ஜா) (பட்டக்கால்தெரு)
பொருளாளர்: ஜனாப். எஸ்.ஹாஜா நிஜாமுதீன் (புதுமனைத்தெரு)
தணிக்கையாளர்: ஜனாப். எஸ்.அபுபக்கர் (தெற்குத்தெரு)

அமான் பைத்துல்மால்  நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம்:
தலைவர்: ஜனாப். ஏ.பனிஅப்தால் (நடுத்தெரு)
துணைத்தலைவர்: அல்ஹாஃபிழ். ஜனாப்.ஜே.சிராஜுதீன் ஹஜ்ரத் (புதுனைத்தெரு)
செயலாளர்: ஜனாப். ஏ.அனீஸுதீன் (பட்டக்கால் தெரு)
பொருளாளர்: ஜனாப். D.முஹம்மது யூசுப்தீன் (பாபு) (ராஜாத்தெரு)
தணிக்கையாளர்: ஜனாப். எஸ்.ஹாஜா உசேன் (புதுரோடு)

களத்தொகுப்பு: அபுஒமர்               புகைப்படம் உதவி: ஹாஜாபாய்